கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு திடுக் திருப்பத்தில் நாய் ஒன்று திடீரென உங்கள் கார் மீது பாய்கிறது. ஜன்னல் கண்ணாடி ஏற்றப்பட்டு இருப்பதால், அதன் மீது முட்டி மோதிக் குரைக்கிறது. கிட்டத்தட்ட உங்களைத் தாக்கும் நெருக்கத்தில் நாய் குரைக்கும் அதிர்ச்சி உங்களைச் சற்றே நிலைகுலையச் செய்கிறது. சில நொடிகளுக்குப் பிறகு, ஜன்னல் கண்ணாடி தாண்டி அந்த நாயால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறீர்கள். ஆனாலும், அந்த நாயின் ஆக்ரோஷமான குரைப்பும் வேகமும் இன்னமும் உங்களை முழுக்க அதிர்ச்சியில் இருந்து மீளச் செய்யவில்லை. அந்தச் சூழலில் மனதைத் திடப்படுத்திக்கொண்டு தொடர்ந்து காரைச் செலுத்தினால், சிறிது தூரம் துரத்தி ஓடி வந்து சோர்வடைந்து அந்த நாய் பின்தங்கிவிடும். மாறாக, பயத்தில் காரை நீங்கள் நிறுத்திவிட்டால், தனது முயற்சிகளுக்குக் கிடைத்த உற்சாகம் எனக் கருதி, இன்னும் ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கும் அந்த நாய்.
தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் அந்த நாயைப்போலத்தான். மிரண்டு நின்றுவிட்டால், நம் மீது ஏறி வீழ்த்தத் துடிக் கும். உதாசீனப்படுத்தி உங்கள் பாதையில் பயணிக்கத் துவங்கினால், அதுவே நீங்கிவிடும். உங்களை அலைக் கழிக்கும் பிரச்னைகளுக்கு ஆகக் குறைந்த முக்கியத்து வம் கொடுங்கள். உங்கள் கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் உங்கள் எனர்ஜியின் பெரும்பகுதியினைச் செலவழியுங்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் சமயங்களில் எல்லாம், எந்தத் தடையும் தடங்கலும் இல்லாமல், உங்கள் பயணத்தில் கவனம் செலுத்துங்கள்!
நாய்கள் குரைத்துக்கொண்டு இருந்தாலும், தேர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவது இல்லை!
- பெர்சியப் பழமொழி
முகுந்தனின் மாமியார் எப்போதும் எதற்கும் குற்றம் குறை சொல்லியே பழகியவர். அவரைச் சந்தோ ஷப்படுத்தலாம் என்று திட்டமிட்ட முகுந்தன், மனைவியுடன் கலந்தாலோசித்து, மாமியாருக்கு ராமேஸ்வரம் துவங்கி காசி வரையிலான வழிபாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். ஏ.சி. ரயில், படுக்கை, சொகுசான தங்கும் இடங்கள், வசதிக் குறைவே இல்லாத பயண ஏற்பாடுகள் என்று ரொம்பவே ஆடம்பர மான பயணத் திட்டம். மாமியார் அது நாள் வரை சென்றே இருக்காத, ஆனால் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருந்த வழிபாட்டுத் தலங்கள்தான் அனைத்தும். எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தும் கடைசி நொடியில் மாமியார் 'இல்லை, எனக்குப் போகப் பிடிக்கலை!' என்று அழிச்சாட்டியமாக மறுத்துவிட்டார். என்ன காரணம் என்று புரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டான் முகுந்தன். இரண்டு நாட்கள் கழித்து மாமியார் தானாகவே வாய் திறந்து காரணம் சொன்னார், 'காசிக்கு டிரெயின் ஏற சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக கால் டாக்ஸி வரும்னு பார்த்தா, ஆட்டோ வந்து நிக்குது. நான் என்ன அந்த அளவுக்குத் தேஞ்சு போயிட்டேனா? இங்கேயே இப்படின்னா, போற இடத்துல என்னலாம் நடக்குமோ... யாருக்குத் தெரியும். அதான் போகலைன்னு சொல்லிட்டேன்!'
இந்த இடத்தில், கால் டாக்ஸிக்குப் பதில் ஆட்டோ ஏற்பாடு செய்ததுதான் தப்பு என்று முகுந்தன் நினைத்து மனம் குமைந்தால், அப்போது அவன் மனம் முழுவதையும் ஆற்றாமையும் எதிர்மறை எண்ணங்களும் ஆக்கிரமிக்கும். ஆசை, பாசம், காதல் கலந்து எவருக்கேனும் ஒரு பரிசு அளிக்கும்போது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை உங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை... அவ்வளவுதான்! நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு அன்பைப் பரிசளித்துக்கொண்டே இருங்கள்.
ஒவ்வொருவரும் அவரவரின் மன விசாலத்துக்கு ஏற்ப தான் சந்தோஷமாக இருப்பார்கள்!
- ஆப்ரஹாம் லிங்கன்
வாரக்கணக்கில் நீளும் மராத்தான் ஓட்டப் போட்டி அது. இளைஞர்களும் அத்லெட்டுகளும் உற்சாகமாக நிற்க... வரிசையில் கடைசியாக வந்து நின்றார் அந்த 61 வயது முதியவர். அனைவரும் எகத்தாளமாகப் பார்க்க, அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. போட்டி தொடங்கியது. 10 நாட்களில் முதல் நபர் இலக்கை அடைவார் என்று அனைவரும் எதிர்பார்த்துஇருக்க... எட்டாவது நாள் மதியமே அந்த முதியவர் வெற்றிக் கோட்டைக் கடந்தார். ஆச்சர்யம்! எவராலும் நம்ப முடியவில்லை. சுறுசுறு இளைஞர்களைக் காட்டிலும் விறுவிறுவென இவர் எப்படி முன்னேறினார்? 'தினமும் 18 மணி நேரம் ஓட்டம்... ஆறு மணி நேரம் மட்டும் தூக்கம்!' என்று மற்றவர்கள் திட்டமிட்டார்கள். முந்தைய வருட சாதனையாளர்கள் அப்படித்தான் திட்டமிட்டு ஓடி இருந்ததால், இவர்களும் அதையே கடைபிடித்தார்கள். ஆனால், நான் அப்படி எந்தக்காலக் கெடுவும் வைத்துக்கொள்ளாமல் ஓடினேன். முடியவே முடியாதபோது மட்டும் கொஞ்சம் தூங்கிக்கொண்டேன். அவ்வளவுதான்!' என்றிருக்கிறார் அந்த முதியவர்.
உங்கள் சிந்தனையை, கற்பனையை எந்த அளவுக்கு விசாலம் ஆக்கிக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் பாய்ச்சல் விஸ்வரூபம் எடுக்கும். அடுத்தடுத்த வருடங்களில் அந்த இளைஞர்கள் தூங்காமல் ஓடி, அந்த முதியவரின் சாதனையை முறியடித்தார்கள். ஆனால், அப்படி அதற்கென அவர்களைத் தூண்டியது அந்த முதியவரின் சிந்தனை!
எல்லா மனத் தடைகளும் நமக்கு நாமே விதித்துக் கொண்டவைதான்!
- ஆலிவர் ஹோல்ம்ஸ்
அது ஒரு பண்ணை. அங்கு வழி தவறி வந்த ஒரு வாத்துக் குஞ்சு ஒண்டிக்கொண்டது. 'குவாக் குவாக்' என்று கத்தியபடி துறுதுறுவென வளைய வந்துகொண்டு இருந்த அது, அங்கிருக்கும் அனைவருக்கும் ஃப்ரெண்ட் ஆகிவிட்டது. 'பப்பி' என்று பெயர் வைத்து, செல்லம் கொஞ்சினார்கள். அன்றும் வழக்கம்போல 'குவாக் குவாக்' என்று கத்தியபடி வளைய வந்தது பப்பி. அப்போது சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்கும் விநோதினி பப்பியைக் கடக்கும்போது, 'ஓ... ஸோ க்யூட்... இவ்வளவு காலையில் பாட்டுப் பாடி எனக்கு விஷ் செய்கிறாயே பப்பி... ஸோ ஸ்வீட்!' என்றாள். சிறிது நேரம் கழித்து செம குண்டான, பயங்கர சாப்பாட்டு ராமனான சேகர் அந்தப் பக்கம் வந்தான். 'குவாக் குவாக்' என்றது பப்பி. 'எப்பப் பாரு சாப்பிடுறதுக்கு எதுனா கேட்டுட்டே இரு... உனக்கு எப்பவும் இதே வேலை!' என்று சிடுசிடுத்துவிட்டுப் போனான். கடைசியாக, அதிபுத்திசாலியான ராஜ் பப்பியைக் கடந்தான். பப்பி 'குவா'க்கியது. 'ஓ பப்பி... கேள்விகள் கேள்விகள்... கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய் நீ!' என்று சீட்டியடித்துவிட்டுப் போனான்.
'குவாக் குவாக்' என்று பப்பி அனைவரிடமும் ஒரே விதமாகத்தான் கத்தியது. ஆனால், ஒவ்வொருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப, அதை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள். இப்படித்தான், நாம் நம்மைச் சுற்றிஇருக்கும் மனிதர்களை, அமைப்புகளை, உலகத்தை எதிர்கொள்கிறோம். மனதுக்குள் சுற்றிச் சுழலும் எண்ண ஓட்டங்கள்தான் முன்தீர்மானத்துடன் நமது அணுகுமுறையை அமைத்துக்கொள்கிறது. இந்த உலகம் கண்ணாடி போன்றது. அதில் எப்படிப் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்!
சுற்றுச்சூழல் - தினமும் நாம் நம்மை உற்று நோக்க வேண்டிய கண்ணாடி!
- ஜேம்ஸ் ஆலன்
4 comments:
Nandru
மிக அருமை...
அற்புதமான கருத்துக்கள்.
அருமையான சிந்தனைகள்.
nice sharing
Post a Comment