Saturday, February 6, 2010

வேப்ப மரத்தில் பால்?

வேப்ப மரத்தில் பால்?
குறிப்பிட்ட இடைவெளிக்குப்பின் மக்கள் மத்தியில் மறந்தும் புத்திசாலித்தனம் அரும்பிவிடக்கூடாது என்ற முறையில் ஏதாவது ஒரு மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கிளப்பி விடுவார்கள்.
இப்பொழுது என்னவாம்! சோழிங்கநல்லூரில் வேப்பமரம் ஒன்றில் பால் வடிகிறதாம். வேப்ப மரத்தில் பால் வடியாமல், தேனா வடியும்?இது பகுத்தறிவாளர்களின் கேள்வி.
ஆனால், அங்கு என்ன பரபரப்பு தெரியுமா? இது தெய்வச் செயல்; இதில் தெய்வீகக் காரணம் இருக்கிறது; விளையாடாதீர்கள், விபரீதம் ஏற்படும் என்று சூட்டைக் கிளப்பிவிட்டார்கள்.
பிழைக்கத் தெரிந்த ஆசாமி ஒருவர் அம்மணமாக இருக்கும் வேப்பமரத்துக்கு மஞ்சள் பாவாடை ஒன்றைக் கட்டினார். அதோடு விட்டுவிட்டால் விறுவிறுப்பு இருக்காதே மரத்தின் அடியில் இரண்டு செங்கற்களை நட்டு வைத்தார் அது மட்டும் போதுமா? மக்கள் பக்தி மயக்கத்தில் வந்து விழவேண்டுமே! என்ன செய்தார்? செங்கல்லில் குங்குமத்தைத் தடவினார்.
ஆம், எதிர்பார்த்தபடி மூட மக்கள் குவிந்தார்கள்; நினைத்தது நடந்துவிட்டது. அடுத்த என்ன செய்யவேண்டும்? யோசித்தார் அந்த புத்திசாலி. ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தார். ஆம், இப்பொழுதுதான் தெய்வீகம், வழிபாடு, காணிக்கை என்பதான ஒரு சூழல். உண்டியல் நிரம்பி வழிந்தது. இப்பொழுதுதான் அந்த ஆசாமியின் உள்ளமும் நிரம்பி வழிந்தது.அத்தோடு அடங்கிவிட்டதா ஆசையின் அலை? ஒரு மாஸ்டர் திட்டம்; இந்த இடத்தில் கோயில் எழுப்பிடவேண்டும். அப்பொழுதுதானே பெருந்தொகை வசூல் வேட்டையில் இறங்க முடியும்?
ஆனால், அந்தப் பாமர மக்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. அந்தப் பால் வடிவது இரண்டொரு நாளில் முடிந்த கதையாகிவிடும். தெய்வீகச் சக்தி என்றால், அதன் ஆட்ட பாட்டம் ஏன் இரண்டொரு நாளில் கடை கட்டவேண்டும்? பக்தி விஷயமாயிற்றே புத்தியைப் பயன்படுத்துவார்களா?
இதற்கு முன்புகூட இதுபோன்ற செய்திகள் வந்ததுண்டு. சென்னைத் தலைமைச் செயலகத்தின்முன் உள்ள ஒரு வேப்ப மரத்தில் இப்படித்தான் பால் வடிந்தது (1986 மார்ச்) சோழிங்கநல்லூரில் இப்பொழுது நடக்கும் இதே கூத்துதான் அப்பொழுதும்.சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவர இயல் பேராசிரியர் நாராயணசாமி அறிவியல் ரீதியாக இதன் குட்டை உடைத்துவிட்டார்.
வேப்ப மரத்தில் இப்படி பால் வடிவதற்கு எந்தவிதமான தெய்வீகக் காரணமும் அல்ல. இந்த மரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. வேப்பமரப் பட்டையின் அடிப்பகுதியில் புளோயம் (Phloem) என்ற திசு இருக்கிறது. இந்தத் திசு வழியாக சர்க்கரையாக மாற்றப்பட்ட மாவுச் சத்து வரும்போது, அது பாலாக இனிக்கிறது. எல்லா வேப்ப மரத்திலும் இப்படி பால் வடிவதில்லை. இந்த மரத்தில் இந்தத் திசு பாதிக்கப்பட்ட காரணத்தால், இப்படிப் பாலாகக் கொட்டுகிறது. தேவையைவிட மரத்தில் உள்ள தண்ணீரின் அளவு அதிகமாகும்போது பட்டையின் அடிப்பகுதியில் உள்ள திசு பாதிக்கப்பட்டு, அதன் வழியாகப் பாலாகக் கொட்டுகிறது. மரத்தில் தண்ணீரின் அளவு குறையும்போது திசு அடைபட்டு, இனிப்புப் பால் வடிவதும் நின்று போகும்.
என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் அளித்து 24 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்குப் பிறகும் மூடக் குப்பையைக் கிளறுகிறார்கள்- மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்களே - சிந்திக்க-வேண்டாமா? பழமொழி ஒன்று உண்டு; கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?
--------------------- மயிலாடன் அவர்கள் 5-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

அம்பிகா said...

பொன்ராஜ்,
அருமையான பகிர்வு.
வேற இ.மெயில் ஐ டி. யா?
நீயும் நிறைய எழுது.

ponraj said...

அம்பிகா அண்ணி!!!
மிக்க நன்றி!!!!
உங்கள் வாழ்த்துகளுக்கு.
முயற்சி செய்கிறேன்