Saturday, June 19, 2010

UNTHINKABLE – நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.


UNTHINKABLE – என்றால் என்ன? நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன? இந்த வழமையான முறைகள், வழமையற்ற முறைகள் என்பதை யார் தீர்மானிப்பது?

தற்செயலாக இந்த ஹாலிவுட் படத்தை பார்த்த போது ஆரம்பத்தில் வழக்கமான விஜயகாந்த் மசாலா என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிய வந்தது. பார்வையாளனது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அரசியல், நீதி, நேர்மைகளை வைத்து உணர்ச்சியைக் கிள்ளி விடுவதில் அல்லது மடை மாற்றுவதில் இந்த படமும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அமெரிக்க குடிமகனான யூசுப், மூன்று நகரங்களில் அணுகுண்டை தயார் செய்து வைத்து விட்டு, அவை மூன்று நாட்களில் வெடிக்கும் என்பதை வீடியோவில் தெரிவித்து விட்டு, போலீசிடம் தானாகவே பிடிபடுகிறான். எல்லா சேனல்களிலும் யூசுப்பின் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதை எஃப்.பி.ஐ(FBI), இராணுவம், முதலான எல்லா அரசு பாதுகாப்பு நிறுவனங்களும் சேர்ந்து விசாரிக்கின்றன.

எஃப்.பி.ஐயின் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் தலைவியான ஹெலன் ப்ராடி ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதே சமயம் பெண் என்பதாலோ என்னமோ மென்மையான அல்லது மனிதாபிமான அதிகாரி. அவளது அணி உறுப்பினர்கள் அணுகுண்டு எப்படி சாத்தியமானது என்பதை விசாரிக்கிறார்கள். யூசூப்பிடமிருந்து அந்த மூன்று இடங்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு ராணுவம், ப்ராடி, அப்புறம் ஹெச் எனப்படும் நடிகர் சாமுவேல் ஜாக்சன் எல்லோரும் கூட்டாக முயல்கிறார்கள்.



கருப்பரான ஹெச் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வெளியாள். அவன் பொதுவில் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், மொன்னைத்தனத்தையும் கிண்டலித்து விட்டு இவையெல்லாம் வேலைக்காகாது என்ற கலக மனப்பான்மை உடையவன். ராணுவ தலைமை கமாண்டரிடமிருந்து விசாரிக்கும் பொறுப்பை வம்படியாக வாங்கிக் கொள்கிறான். அவனது நடத்தைக்கு நேரெதிர் துருவமாக ப்ராடி வாதிடுகிறாள். இவர்களுக்கிடையில் எப்படியாவது குண்டு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தால் சரி என்று ராணுவ கமாண்டர் காரியவாதமாக இருக்கிறான்.



முழுப் படமும் யூசுப்பை வைத்திருக்கும் சித்திரவதைக் கூடம் மற்றும் விசாரணை அரங்கிலேயே நடைபெறுகிறது. ஆரம்பத்தில் எல்லாரும் ப்ராடி உட்பட யூசுப்பிடம் விசாரிக்கிறார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக அழுத்தம் கூடுகிறது. என்ன செய்வது? அணுகுண்டுகள் வெடித்தால் குறைந்தது ஒருகோடி மக்கள் கொல்லப்படுவார்கள். எப்படி தடுக்க முடியும்?



வழக்கமான விசாரணைகளின் போதாமையை எள்ளி நகையாடும் ஹெச் ஒரு சுத்தியலால் யூசுப்பின் சுண்டுவிரலை அடித்து நசுக்குகிறான். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். யூசுப் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் அவனை இப்படி சித்திரவதை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் ப்ராடி வாதிடுகிறாள். குண்டு வைப்பது மட்டும் சட்டத்திற்கு உடன்பாடானதா என்று ஹெச் மடக்குகிறான்.

சித்திரவதை செய்தது போக அவன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ப்ராடி அன்பாக யூசுப்பிடம் விசாரிக்கிறாள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயம்தானா என்று கேட்கிறாள். யூசுப் ஒரு எக்காளமான புன்முறுவலுடன் அதை புறந்தள்ளுகிறான். ஒரு கட்டத்தில் தான் அமெரிக்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுவதாகவும் அது ஏற்கப்பட்டால் குண்டுகள் இருக்குமிடத்தை தெரிவிப்பதாகவும் கூறுகிறான். அது ஏற்கப்படுகிறது.

அவனது சித்திரவதை காயங்களை மறைத்து ஒரு போர்வை போர்த்தப்படுகிறது. காமராவைப் பார்த்து யூசுப் தெளிவான குரலில் பேசுகிறான். “உலகெங்கும் உள்ள இசுலாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு வாபஸ் வாங்க வேண்டும்.” இதுதான் அவனது கோரிக்கை.

ஒரு அரை லூசு பயங்கரவாதிக்காக அமெரிக்கா வாபஸ் வாங்குவதா என்று ராணுவ கமாண்டர் தலையில் அடித்துக் கொள்கிறான். நிறைவேற சாத்தியமே இல்லாத இந்த கோரிக்கைதான் அவனது குண்டுகளை கண்டுபிடிக்கும் என்றால் வேறு வழியில்லை, விசாரணை சூடுபிடிக்கிறது. இல்லை சித்திரவதை அனல் பறக்கிறது.

நிதானமாக ஒரு லேத் பட்டறை தொழிலாளியின் லாகவத்தோடு எந்த உணர்ச்சியுமின்றி இயல்பாகவே ஹெச் சித்திரவதைக் கருவிகளோடு யூசுப்பை வதைக்கிறான். அவனது நகங்கள் பிடுங்கப்படுகின்றன. விரல்கள் நசுக்கப்படுகின்றன. அந்தரத்தில் கட்டி தொங்க விடப்படுகிறான். உடலெங்கும் கத்திக் குத்து காயங்கள். அவனது அலறல் அவ்வப்போது சித்திரவதைக் கூடத்தின் மரண இசையாக ஒலிக்கிறது. ஆனாலும் அவன் பேசமறுக்கிறான்.

ப்ராடி அவனிடம் அவனது அன்பான மனைவி, குழந்தை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சென்டிமெண்டாக விவரித்து கெஞ்சுகிறாள். அவன் ஒரு ஹீரோ எனவும், சும்மா பயமுறுத்துவதற்காகத்தான் இந்த வெடிகுண்டு விளையாட்டை அவன் நடத்துகிறான் என்றெல்லாம் பேசுகிறாள். யூசுப் ஒரு இடத்தின் முகவரியைக் கூறி அங்கு குண்டு இருப்பதாக தெரிவிக்கிறான்.

கமாண்டோ படை அங்குசென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தை எடுக்கும் போது அதிலிருந்த பொத்தான் அழுத்தப்பட்டு அருகாமை வணிக அங்காடியில் குண்டு வெடிக்கிறது. 53 பேர்கள் கொல்லப்படுகின்றனர். தான் விளையாடவில்லை என்பதை தெரிவிக்கவே இந்த குண்டு வெடிப்பு என்கிறான் யூசுப்.


அதுவரை நிதானமாக இருந்த ப்ராடி இப்போது சினங்கொண்டு அவனது நெஞ்சை கத்தியால் கிழித்தவாறே கொல்லப்பட்டவர்களுக்காக வாதிடுகிறாள். ஈராக்கிலும் இதே போல தினமும் 53 அப்பாவிகள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்படுகிறார்களே, அது தெரியாதா என்று வினவுகிறான் யூசுப். தன்னை அறியாமலே தானும் இப்போது சித்திரவதையைக் கைக்கொள்ள ஆரம்பித்த அதிர்ச்சியில் ப்ராடி செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்குள் அந்த போராட்டம் தீவிரமடைகிறது.

எல்லா சித்திரவதைகளையும் கையாண்ட பிறகும் யூசுப்பை பேசவைப்பதில் தோல்வியடையும் ஹெச் சோர்வுறுகிறான். இருப்பினும் அவனது UNTHINKABLE முறைகள் இன்னும் தீரவில்லை. இசுலாமிய அடையாளத்துடன் இருக்கும் யூசுப்பின் மனைவியை அழைத்து வரச்சொல்கிறான். ஆரம்பத்தில் தனது கணவன் அப்பாவி என்று வாதிடும் அவளை பயங்கரவாதிக்கு உதவிய குற்றத்திற்காக உள்ளே தள்ள முடியும் என்று ப்ராடி மிரட்டுகிறாள்.

கணவனது எதிரே அமரவைக்கப்படும் அவள் அழுதவாறே ஹெச் எழுப்பும் கேள்விகளை கேட்கிறாள். யூசுப் அழுதாலும் உறுதியாக இருக்கிறான். இனி அவனது மனைவியையும் அவன் முன்னே சித்திரவதை செய்யப்போவதாக ஹெச் கூறுகிறான். அனைவரும் அவனை தடுக்கிறார்கள். அந்த தள்ளுமுள்ளுவையும் மீறி அவன் யூசுப் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்கிறான். அவளும் இரத்தம் வடிய கொல்லப்டுகிறாள்.

இந்த அதிர்ச்சியிலேயே எல்லாரும் நீடிக்க முடியவில்லை. குண்டுகள் வெடிப்பதற்கான நேரம் நெருங்கி வருகிறது. ஹெச் இப்போது யூசுப்பின் சிறு வயது குழந்தைகளை கேட்கிறான். ப்ராடி கடுமையாக எதிர்க்கிறாள். மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இசுலாமிய அடையாளத்துடன் வரும் அந்த பிஞ்சுகள் சித்திரவதைக் கூடத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றனர். யூசுப் வெளியே கொண்டு வரப்பட்டு சேம்பரின் கண்ணாடிக்கு முன்னே அமரவைக்கப்படுகிறான். அவனது முகமூடி கழட்டப்படுகிறது. உள்ள குழந்தைகளுடன் சித்திரவதைக்கு தயாரகும் ஹெச். இதற்கு மேலும் தாளமாட்டாமல் அழுது வெடிக்கும் யூசுப் கடகடவென்று குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இடங்களையும் கூறுகிறான். ஒரு வழியாக பிரச்சினை முடிவது போல தெரிகிறது.


இல்லை, யூசுப் பயன்படுத்திய அணுகுண்டு மூலப்பொருளில் மூன்று குண்டுகளில் வைத்தது போக மிச்சம் இருக்கிறது, அது நாலாவது குண்டு என்கிறான் ஹெச். அதைக் கண்டுபிடிக்க யூசுப்பின் குழந்தைகள் மீண்டும் தேவைப்படுவார்கள் என்கிறான். ப்ராடியைத் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்கள். குண்டு வெடித்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்கிறாள் ப்ராடி. யூசுப்பின் கட்டுக்களை அவிழ்த்து விடும் ஹெச் இனி அவன் சுதந்திரமனிதன் என்கிறான். ராணுவ கமாண்டரின் துப்பாக்கியைப் பறிக்கும் யூசுப் தற்கொலை செய்கிறான். வெடிக்கக் காத்திருக்கும் நாலாவது வெடிகுண்டின் நேரக்கருவியின் கவுண்டவுணோடு கேமரா நம்மிடமிருந்து விடைபெறுகிறது.
















அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை படம் எழுப்புகிறது. ஆனால் முகத்தில் அறையும் அமெரிக்க யதார்த்தம் இந்த புனைவின் மீது காறி உமிழ்கிறது.

உலகெங்கும் சி.ஐ.ஏ நடத்தியிருக்கும் சதிகள், கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எண்ணிலடங்கா. உலகின் எல்லா வகை சித்திரவதை முறைகளுக்கும் ஊற்று மூலம் சி.ஐ.ஏதான். குவாண்டமானோ பேயில் அமெரிக்க சட்டம் செல்லாத இடத்தில் அப்பாவிகளை வைத்து சித்திரவதை செய்தவற்கென்றே ஒரு முகாமை நடத்தும் அமெரிக்காவின் உண்மை முகத்தை இந்த படம் திறமையாக மறைக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் என்பதையோ, அதில் சில இலட்சம் குழந்தைகளும் உண்டு என்பதையோ இந்த படம் சுலபமாக கடந்து செல்கிறது. யூசுப்பின் குண்டு கொல்லப்போகும் அமெரிக்க உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளின் மனிதர்களுக்கு இல்லை போலும். படத்தில் இதையே யூசுப் கேட்டாலும் அவனது கேள்வியின் நியாயத்தை படம் பலவீனமாக்குகிறது.

யூசுப்பின் குழந்தைகளை ஹெச்சிடமிருந்து காப்பாற்றுவதற்காக கதவை உடைத்து உள்ளை நுழையும் அமெரிக்க வீரர்களின் உண்மை முகத்தை பாக்தாத் மண்ணில்தான் பார்க்க முடியும். பாரசீக மண்ணில் ரத்தம் குடிக்கும் அமெரிக்க கழுகு இரண்டு குழந்தைகளுக்காக கண்ணீர் விடுவதை நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் பார்வையாளர்கள் விடும் கண்ணீர் இங்கே தந்திரமாக வரவழைக்கப்படுகிறது.

குண்டு வெடித்தாலும் வெடிக்கட்டும் அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று ப்ராடி அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சி அமெரிக்க மனிதாபிமானத்தின் குறியீடாக இதயத்தை அழுத்துகிறது. ஆனால் மருந்து தடைக்காகவே பல்லாயிரம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டது அமெரிக்க மனசாட்சியை உலுக்கவே இல்லையே?



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விசாரிப்பவர்கள் எல்லாரும் யூசுப்பை அரசியல் ரீதியாக கன்வின்ஸ் செய்து பேசவில்லை. அப்படி பேசவும் முடியாது என்பது வேறு விசயம். ப்ராடி கூட அவனது மனைவி, குழந்தைகள், அன்பான குடும்ப வாழ்க்கை என்றுதான் விளக்குகிறாள். ஆனால் ஒரு போராளி தனது ஆன்ம பலத்தை சமூக அரசியல் காரணிங்களிலிருந்துதான் பெறுகிறான் என்பதை இந்த படம் சிறுமைப்படுத்துகிறது. தனது சொந்த பந்தங்களின் மகிழ்ச்சியை விடவும் தனது சமூகத்தின், நாட்டின் துன்பத்தை களைய நினைக்கும் போராளியின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவனது சாரம் என்ன?


யூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது? அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான்?. வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது? அந்த வலியோரின் கொடூரம் நிறுத்தப்படாத போது எளியோரின் செயல் மட்டும் ஏன் பயங்கரவாதமாக பொதுப்புத்தியில் நுழைக்கப்படுகிறது?

ஆக பயங்கரவாத்தின் இந்த பரிமாணங்களை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறார். அது வெறும் சட்டம், சிவில் உரிமை, சென்டிமெண்டாக மட்டும் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தீவிரவாதிக்கு மனித உரிமை சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதல்ல பிரச்சினை. அமெரிக்க அரசு தானே வைத்திருக்கும் சட்டங்களும், புதிதாக உருவாக்கும் சட்டங்களும் எந்த மனித உரிமையை வைத்து உருவாக்குகிறது? அமெரிக்க நலன் என்ற வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருப்பது அமெரிக்க முதலாளிகளின் நலன் என்பதுதான் அவர்களது மனித உரிமை அளவுகோல். அதனால்தான் அமெரிக்காவின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்களது சட்டப்படியே நியாயப்படுத்தப்படுகின்றன.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இன்னொரு புறம் பயங்கரவாதிகள் தமது வலுவான எதிரிகளை வீழ்த்த முடியாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே உள்ள அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றன. அப்படி ஒரு நியாயப்படுத்துதலின் ஒரு சரடைத்தான் இந்த படம் சித்தரிக்கிறது.


பயங்கரவாதிகளை வழமையான முறைகளில் சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் ஹெச்சின் கருத்து. அமெரிக்க அரசையும் அப்படி வழமையான முறைகளில், சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் பயங்கரவாதிகளின் கருத்து. எனினும் இரண்டு பயங்கரவாதங்களையும் சமப்படுத்தி பார்ப்பதால் அது இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கே உதவி செய்யும். அமெரிக்காவை வீழ்த்தும் சக்தியை உலக மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அது வரை இந்த ஆட்டம் நடக்கத்தான் செய்யும்.


அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும்.


பரிசோதித்துப் பாருங்கள்! பரிசோதிப்பதற்காகவே பாருங்கள்!!


நன்றி: தர்மராஜன்

3 comments:

VijayaRaj J.P said...

"யூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது?"

யோசிக்க வேண்டிய ஆனால் விடை சொல்ல
முடியாத கேள்வி.

அண்ணாமலையான் said...

நல்லா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்...

அம்பிகா said...

அருமையான பகிர்வு பொன்ராஜ்.
\\அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும்.


பரிசோதித்துப் பாருங்கள்! பரிசோதிப்பதற்காகவே பாருங்கள்!!\\
பார்க்கலாம்.