Friday, July 30, 2010

நான் ரசித்த சில கவிதைகள்..... பாகம் - 2

கண்டு கொண்டேன்....




கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

நட்பு..!



சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு.


காதல்!



கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!

ஏக்கம்



விளை நிலங்கள்
எல்லாம்
வீட்டு மனைகளாக!
ஏக்கத்துடன் நின்றன,
புல்மேய முடியாமல்
மாடுகள்

சித்தனும் பித்தனும் இயற்கை!




பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!

நினைவு



சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வாழ்க்கை கணக்கு



வாழ்க்கையில்,
அன்பை கூட்டிக்கொள்!
அறிவை பெருக்கிக்கொள்!
இனிமையை
தனிமையால் வகுத்துக்கொள்!
பாவத்தைக் கழித்துக் கொள்!
பிறருடன் சமமாக
வாழ கற்றுக் கொள்...!

Friday, July 23, 2010

kavithaikaL...

நான் ரசித்த சில கவிதைகள்.....





வேர்கள்!!!

உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
என்னையும் மாற்றிக்கொள்வேன்!!!




அம்மா

அவளை உதைத்த பொழுதில் கூட
செல்லமாய் என்னை
வருடின
அவள் விரல்கள்
வலியில் துடித்து கொண்டு கூறினாள்
என் செல்லமே
பயப்படாதே!
உனக்கு வலிக்காமல்
உன்னை பெற்றேடுப்பேன்..



நட்பு!!

அழுதவுடன் அரவணைக்கும்
அன்னையிடம் ஆரம்பிக்கும்
அந்த அழகிய நட்பு !!!

ஆள் கொஞ்சம் வளர்ந்திடவே
ஆடாத ஆட்டம் ஆட
ஆள்சேர்த்து ஆர்பரிக்கும்
ஆண்களின் நட்பு !!!

இவன் வீட்டு சாப்பாடு
இனம் விட்டு இடம் மாறி
இளம் சிட்டாய் இவ்வுலகையே
இரண்டக்கிடுமே இந்த நட்பு !!!

ஈயாய் ஒற்றிக்கொள்வோம்
ஈருயிராய் வாழ்ந்திடுவோம்
உள்ளதெல்லாம் செலவழிப்போம்
ஊரு ஊராய் சுற்றிடுவோம் !!!

எந்த ஜாதியும் அறியமாட்டோம்
ஏழை ஏக்கமமும் உணரமாட்டோம்
ஐந்து விரலாய் உதவிக்கொள்வோம்
ஒன்றாய் தட்டில் உணவு கொள்வோம் !!!

ஓரிடத்தில் இல்லா விட்டாலும்
ஓருயிராய் நினைவு கொள்வோம்
ஓளவை வயது வரை ஒற்றுமையாய்
உலகை அளப்போம் !!!!



அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...

உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை...!!!



மௌனம்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!



வாழ்க்கைப் பயணம்...

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை

என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......




பாசம்!!

பாசம் வைத்தவர்கள் எல்லாம்

தூர போகிறார்கள் என்னை பிரிந்து

இனி பாசம் வைப்பதில்லை

என்னருகில்,
ஒருவராவது...




குருதி ப‌டிம‌ங்க‌ள்

கைக‌ள் எங்கும் க‌றைக‌ள்
அது என்ன‌வென்று கூட‌ என்னால் யூகிக்க‌ முடிய‌வில்லை
என் சுவாச‌ ப‌குதி முழுவ‌தும் ப‌டிந்து ப‌டிந்து
ப‌டிம‌ங்க‌ள் ஆகி போன‌ குருதியோட்ட‌ம் !!
பூமிதாயின் குலுங்க‌லால் சிதில‌ம‌டைந்த‌
நாட்க‌ளில் குப்பைக‌ளை போல‌
வ‌ண்டிக‌ளில் ஏறிய‌ பிண‌க்குவிய‌ல்க‌ள்!!
அன்றோ க‌ட‌ல்தாயின் சீற்ற‌த்தால் சுழ‌ன்று வ‌ந்து
சுருட்டி கொண்டு போன‌ உயிர்க‌ள் எங்கோ?
இதுவெல்லாம் போதாதென்று இன‌ம்
ம‌த‌ம் மென‌ த‌லை பிய்த்து த‌சை பிரிக்கும் சில‌ர்!!
என்ன‌தான் ந‌ட‌க்கும் என‌ சில‌ர்!!
எதுவும் புரியாம‌ல் சில‌ர்!!
என்னை போன்ற‌ குருதி ப‌டிம‌ங்க‌ளிடையே சில‌ர்!!
ஈழ‌ த‌மிழ‌னாய்.........




ஊமைக் கொலைகள்...

பனித்துளி உறிஞ்சிடும்
சூரியன்...

மரம் வெட்டிடும்
கோடாரி...

பூமியை பிளந்திடும்
பூகம்பம்...

வானத்தை வடுப்படுத்தும்
மின்னல்...

பூ பறிததெறியும்
கரங்கள்...

நீரினை சிதறவிடாத
மேகங்கள்...

தழுவிச் சென்றிடாத
தென்றல்...

மௌனமாய் கண்ணீர்விடும்
மனங்கள்...

இவற்றில் நடப்பவையெல்லாம்
"ஊமைக் கொலைகளே..."


நன்றி!!!

Monday, July 12, 2010

வாழ்க்கை பயணங்கள்.....

வாழ்க்கை பயணங்கள்.....







பிறப்பு,மழலை,

சிறு வயது குறும்பு,

படிப்பு,பொழுதுபோக்கு,

வேலை,சம்பாத்தியம்,

திருமணம்,போராட்டங்கள்,

குழந்தைகள்,

குழந்தைகளின் - வளர்ப்பு,படிப்பு,

வேலை,திருமணம்,

நல்லது,கெட்டது,

இன்பங்கள்,துன்பங்கள்,

பலருக்கு உதவுதல்,ஒய்வு,

மலரும் நினைவுகள்,மனநிறைவு

இறப்பு!!!

இதுதான் வாழ்க்கையா.....?

Friday, July 9, 2010

இது நியாயம்தானா?





அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள் குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாககக் கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்பு தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க வாழ்க பல்லாண்டு ...! கடைசித் தமிழனை அழிக்கும் வரை...!!!

நன்றி: இரா. ரவி

Tuesday, July 6, 2010

சிந்திக்க சில .....

"வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்தவனுக்கு
வேப்பங்காயும் இனிக்கத்தான் செய்யும்"


"அவமானங்களை சேகரித்து வையுங்கள்,வெற்றி உங்களை தேடி வரும்"


"வாழ்க்கையில் தோல்வி என்பது முடிவு அல்ல,
அந்த தோல்வியே வெற்றிக்கு முதல் படி"


"நல்லவர்கள் கூட தோற்று போகலாம்,ஆனால்
நம்பிகை உள்ளவர்கள் ஒரு போதும் தோற்று போவதில்லை"


"வெற்றிக்காக காத்து இருப்போரை விட,
வெற்றிக்காக உழைப்போரே, சிறந்த படைப்பாளி"


"பிராத்தனை செய்யுங்கள்,கடவுளுக்கு அருகில் நிங்கள் செல்லலாம்!!
சேவை செய்யுங்கள்,கடவுள் உங்கள் அருகில் வருவார்!!"


சிந்தித்து சிரிக்க சில ....


காதல் கடிதத்திற்கும்,பரீட்சை தாளுககும் உள்ள வித்தியாசம்:

காதல் கடிதம் : உள்ளுக்குள்ள நிறைய இருக்கும் ஆனால் எழுத முடியாது

பரீட்சை தாள் : உள்ளுக்குள்ள ஒன்னுமிருக்காது ஆனால் நிறைய எழுதலாம்




மனைவி : டார்லீங்,நான் உஙகளுக்கு இப்படி சமைச்சு போட்டுக்கிட்டே இருந்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கணவன்:என்னோட இன்சூரன்ஸ் பணம் சிக்கிரம் உனக்கு கிடைக்கும்.

மனைவி : ???